ஈரோடு அருகேயுள்ள மூலனூர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் சுதாவிற்கு போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூலனூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 10 பேரில் 5 பேர் திமுகவையும், 3 பேர் காங்கிரஸ் கட்சியையும், 2 பேர் அதிமுக-வையும் சேர்ந்தவர்கள். திமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுதா ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சுதா, கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக-வில் இணைந்து விட்டார். இதையடுத்து மூலனூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சுதா தலைமை தாங்கினார்.
இதில் திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கலந்துகொண்டதுடன், சில நிமிடங்களில் வெளிநடப்பு செய்தனர்.