தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை : முதல்வரிடம் மத்திய அரசு உறுதி!
வெள்ளி, 21 நவம்பர் 2008 (12:35 IST)
சிறிலங்க கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்களை ஓரிரு நாட்களில் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளில் இலங்கையில் உள்ள இந்திய தூதர் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாக மத்திய அரசு முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறை பிடித்துச் சென்றனர்.
உடனடியாக அவர்களை மீட்பதற்காக முயற்சியில் ஈடுபட்ட முதல்வர் கருணாநிதி, மத்திய அயலுறவுத் துறை இணை அமைச்சர் அகமதுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது தமிழக மீனவர்களை மீட்பது குறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று காலையில் மத்திய அமைச்சர் அகமது, முதல்வர் கருணாநிதியை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது நமது மீனவர்கள் இலங்கைக் கடலில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையிலே சென்று மீன் பிடித்ததால், இலங்கை ராணுவத்திற்கு சந்தேகம் ஏற்பட்டு அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள்.
ஓரிரு நாட்களில் அவர்களை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளில் இலங்கையில் உள்ள இந்திய தூதர் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார் என்று தகவல் தெரிவித்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.