இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா பதில் மனு தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விடுதியின் அடிப்படை வசதிகள், கல்வித்தரம் ஆகியவை பற்றி ஆராய குழு அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், கல்லூரி வளாகம், விடுதியில் போராட்டம் நடத்தியது நடத்தியது தொடர்பாக 30 மாணவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படடுள்ளதாகவும், 22 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு எந்தவித விசாரணையும் நடக்கவில்லை என்றும், சட்டக்கல்லூரி பகுதி நேர கல்லூரி போல நடைபெறுகிறது என்றும் அவர் வாதிட்டார்.
இந்த வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் மாசிலாமணியிடம், சட்டக்கல்லூரியில் உள்ள குறைபாடுகள் நீதித்துறையை நேரடியாக பாதிக்கும். எனவே அரசு தலைமை வழக்கறிஞர் தலைமையில் ஒரு குழு சட்டக்கல்லூரிக்கு சென்று ஆய்வு நடத்தி, மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், கல்வித்தரத்தை உயர்த்துவது பற்றியும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து நவம்பர் 25ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது உள்ள அனைத்து வழக்குகளையும் விசாரித்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது விரைவில் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையின் போது அரசியல்வாதிகள், அரசு குறுக்கீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பல்கலைக் கழக துணைவேந்தர், சட்டக் கல்வி இயக்குனர், கல்லூரி நிர்வாகிகள், காவல்துறையினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.