நெய்யாறு இரு மாநிலங்களுக்கும் சொந்தமான நதிதான்: அமைச்சர் துரைமுருகன்!
வியாழன், 20 நவம்பர் 2008 (10:54 IST)
தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியை நீர் ஆதாரமாகக் கொண்டு உற்பத்தியாகி கேரளத்திற்குள் ஓடும் நெய்யாறு நதி நீர் இரு மாநிலங்களுக்கும் சொந்தமானதே என்று தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
நெய்யாறு நதி நீரை அடிப்படையாகக் கொண்டு கடந்த 35 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 9,200 ஏக்கர் நிலம் நீர் பாசன வசதி பெற்று வருகிறது என்று கூறிய துரைமுருகன், நெய்யாறு நதி நீர் பகிர்விற்கு அடிப்படையான 1958ஆம் ஆண்டின் கேரள அரசு அறிக்கையை ஆதாரமாகக் காட்டியுள்ளார்.
நெய்யாறு நதி கேரளத்தில் உற்பத்தியாகி ஓடும் நதி என்றும், அதன் நீரை பயன்படுத்துவது தொடர்பாக தமிழ்நாட்டின் அனுமதியை கேரள அரசு பெற வேண்டிய அவசியமில்லை என்றும் கேரள பாசனத்துறை அமைச்சர் என்.கே. பிரேமசந்திரன் கூறியிருந்தார்.
இதனை மறுதளித்து இன்று விரிவாக விளக்கமளித்துள்ள அமைச்சர் துரைமுருகன், “கேரள அரசு 1958ஆம் ஆண்டு வெளியிட்ட அம்மாநிலத்தின் நீர் ஆதாரங்கள் பற்றிய அறிக்கையிலேயே நெய்யாறு இரு மாநில நதிதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.
1958ஆம் ஆண்டு அறிக்கைக்கு முரணாக 1995ஆம் ஆண்டு அம்மாநில அரசின் நீர் ஆதார மேம்பாட்டு மையம் வெளியிட்ட கேரள நீர் வரைப்படத்தில் நெய்யாறு நதியின் உற்பத்தி பகுதி முழுமையாக கேரளத்தில் உள்ளது போல காட்டப்பட்டுள்ளது என்று கூறிய துரைமுருகன், அதனை அடிப்படையாகக் கொண்டுதான் அது இரு மாநில நதியல்ல என்று அமைச்சர் பிரேமசந்திரன் பேசிவருகிறார் என்று குற்றம் சாற்றியுள்ளார்.
கேரளத்தின் 1958ஆம் ஆண்டு அறிக்கை மட்டுமின்றி, இந்திய நில அளவியல் துறையின் (Survey of India) வரைபடங்களும் (வரைபடங்கள் எண் 58 H 2& 3 ) நெய்யாற்றை இரு மாநில நதியாகத்தான் காட்டியுள்ளன் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
“எந்த ஒரு ஒப்பந்தமும் யதார்த்தை கணக்கில் கொண்டதாகவும், இயற்கை நியாயத்தை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்” என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
1999ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் பாசன அமைச்சராக இருந்த வி.பி. இராமசந்திர பிள்ளை தனக்கு எழுதிய கடிதத்தில் நெய்யாறு இரு மாநில நதியல்ல என்றும், எனவே அதனை பகிர்வு செய்வது குறித்து தமிழ்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளத் தேவையில்லை என்றும் எழுதியிருந்ததாகவும், அதற்கு பதில் எழுதியபோது, அது இரு மாநில நதி இல்லையென்றாலும் கூட, அந்த நதி நீர் பயன்பாடு குறித்து ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம் என்று தான் எழுதியதாகவும் குறிப்பிட்ட துரைமுருகன், அந்த கடிதத்தையே தங்கள் வசதிக்கு ஒரு ஆதாரமாக பயன்படுத்தி தவறான தங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறது கேரளா என்று கூறினார்.
இப்பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ளவே தமிழகம் விரும்புகிறது என்றும், அதற்கான அழைப்பை கேரள அரசு விடுத்தால், தான் அங்கு சென்று பேசத் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.