சென்னை சட்டக் கல்லூரி விவகாரத்தில் ஜெயலலிதா உங்களைக் குற்றஞ்சாட்டி, தார்மீகப் பொறுப்பேற்று நீங்கள் பதவி விலகவேண்டும் என்று சொல்கிறாரே, அவரைப் போலவே வைகோவும் அதே கருத்தைச் சொல்லியிருக்கிறாரே என்று கோவையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த முதல்வர் கருணாநிதி கிண்டலாக, "இதிலேயிருந்து என்ன தெரிகிறது என்றால், என்னை ராஜினாமா செய்ய வேண்டுமென்று சொல்வதற்காக மாணவர்களின் இரு சாராரையும் இவர்களே தூண்டி விட்டு சண்டை போடச் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது'' என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் முதல்வர் கருணாநிதிக்கு வழக்கறிஞர் தாக்கீது அனுப்பியுள்ளார். அதில், "சென்னை சட்டக்கல்லூரியில் 12ஆம் தேதி நடந்த மாணவர்கள் மோதலை ஜெயலலிதா தூண்டிவிட்டதாக கோவையில் நடந்த பேட்டியில் கூறியிருக்கிறீர்கள். இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் செயல், நீதி மன்றத்தில் இருக்கும் ஒரு பிரச்சினையை திசை திருப்புவதாகும்.
எனது கட்சிக்காரர் வன்முறையில் ஈடுபடும்படி யாரையும் தூண்டி விடவில்லை. என் கட்சிக்காரர் அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார். அவர் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேட்டி அளித்தற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும், எழுத்து மூலம் மன்னிப்பு கேட்பதுடன் பத்திரிகைகளிலும் அது வெளியாக வேண்டும்.
தவறினால் உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவதூறு பரப்பியதற்காக ரூ.1 கோடி நஷ்ட ஈடும் வழங்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.