போரை நிறுத்த வலியுறுத்தி சென்னையில் இன்று வைகோ உண்ணாவிரதம்!
புதன், 19 நவம்பர் 2008 (12:51 IST)
இலங்கை அரசின் தமிழ் இனப் படுகொலைக்குத் துணை போகும் இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்தும், போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தலைமையில் சென்னையில் இன்று அக்கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் தொடங்கி வைத்தார்.
போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உள்பட அக்கட்சியின் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
இலங்கை அரசின் தமிழ் இனப் படுகொலைக்குத் துணை போகும் இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்தும், இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வலியுறத்தியும் ம.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சென்னை சேப்பாக்கத்தல் வைகோ தலைமையில் இன்று இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
உண்ணாவிரதப் பந்தலில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வைகோ, "வரும் 25ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன்னால் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில் ம.தி.மு.க. முழுமையாக கலந்து கொள்ளும்" என்று கூறினார்.
தமிழகத்தில் அரசியல் கட்சிகள், திரையுலகினர், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மறியல், உண்ணாவிரதம், மனிதச்சங்கிலி என பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருவதாகவும் வைகோ குற்றம்சாற்றினார்.