சிறிலங்க கடல்பகுதியில் நுழைந்ததால் மீனவர்கள் கைது : அதிகாரிகள் விளக்கம்!
புதன், 19 நவம்பர் 2008 (12:22 IST)
சிறிலங்க கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததால்தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாபட்டணத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்களில் 17 பேரை சிறிலங்க கடற்படையினர் நேற்று சிறை பிடித்தனர்.
அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்த சிறிலங்க கடற்படையினர் அவர்களை காங்கேசன் துறையில் உள்ள காவல் நிலையத்தில் சிறை வைத்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டது குறித்து சிறிலங்க அதிகாரிகள் கூறுகையில், "தமிழக மீனவர்கள் சிறிலங்க கடல் எல்லைக்குள் டெல்ப்ட் தீவில் இருந்து 3 கடல் மைல் தொலைவில் உள்ள நாய்னா தீவுப் பகுதியில் நுழைந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பிடிபட்டனர். எங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததால் தான் அவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். அந்த பகுதியில் சிறிலங்க கடற்படையினர் மட்டுமே செல்ல அனுமதி உள்ளது" என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தியாவில் இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் 65 பேரும், தூத்துக்குடியில் 15 பேரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர்கள் அதற்கு பதில் நடவடிக்கையாகவோ, பழிவாங்கும் நடவடிக்கையாகவோ, தமிழக மீனவர்களை சிறை பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
மேலும், சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் ஆனால் அவர்கள் எப்போது விடுதலை ஆவார்கள் என்பதை இப்போது தெரிவிக்க இயலாது என்றும் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பிறகு, விசாரணையில் எந்த உள்நோக்கத்துடனும் அவர்கள் நுழையவில்லை என்று தெரியவந்ததும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.