மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும் : கனிமொழி வலியுறுத்தல்!
புதன், 19 நவம்பர் 2008 (10:23 IST)
சிறிலங்க அரசு தன் மக்களையே அழிக்கும் அநாகரீகத்தை தடுக்க வேண்டும் என்றும் தமிழர்கள் என்பதற்காக இல்லாவிட்டாலும் அவர்களும் மனிதர்கள் என்பதற்காகவாவது மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும் என்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில், இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு ஆதரவு திரட்டியும், இலங்கையில் நடப்பது என்ன? என்று மக்களுக்கு விளக்கிக் கூறுவதற்காகவும் நவம்பர் 18ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு கூட்டமைப்பின் தலைவர் எழிலன் தலைமையில் 15 மாணவர்கள் வாகன பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
webdunia photo
FILE
இந்த சுற்றுப்பயணத்தை கறுப்பு கொடியசைத்து கனிமொழி தொடங்கி வைத்துப் பேசுகையில், "ஈழத்தின் உண்மை நிலை என்ன? என்பதை நம்மால் முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியவில்லை. இலங்கையில் உள்ள பத்திரிகைகள், ஊடகங்கள் அந்த நாட்டு அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் வெளியிடுகின்றன" என்று கூறினார்.
இலங்கையில் பள்ளிக்குப் போக வேண்டிய குழந்தைகள் பதுங்கு குழியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லை. இப்படியொரு நிலையை ஏற்படுத்தியிருக்கும் நாடு ஒரு நாடா? என்று கேள்வி எழுப்பினார்.
சிறிலங்க அரசு தன் மக்களையே அழிக்கும் அநாகரீகத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். தமிழ் பேசும் பாவத்திற்காக அவர்களை அழிக்கிறார்கள். தமிழர்கள் என்பதற்காக இல்லாவிட்டாலும் அவர்களும் மனிதர்கள் என்பதற்காகவாவது குரல் கொடுக்க வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தினார்.