தமிழக மீனவர்கள் 400க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை சிறிலங்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டட போது இந்தியாவின் இறையாண்மை எங்கே போனது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
webdunia photo
FILE
ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்து பேசிய அவர், "ஈழத்தமிழர்க்காக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்கள் வாழ்வா, சாவா என போராடி வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தும் மத்திய அரசு தொடர்ந்து மெளனமாக இருந்து வருகிறது" என்று குற்றம்சாற்றினார்.
இலங்கை அரசு உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அனைத்து தமிழ் இன மக்களும், வீடுகள், உடமைகளை இழந்து தவித்து வரும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்து ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழக அரசின் மூலம் அனுப்பப்படும் 800 டன் உணவுப் பொருள்களும் ஈழத்தமிழர்களுக்கு போய்ச் சேரப்போவது இல்லை என்று கவலை தெரிவித்த அவர், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்களை இலங்கைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது, தன்னைஅரசு தடுத்து கைது செய்ததை அப்போது அவர் சுட்டிக்காட்டினார்.
பிறகு உண்ணாவிரதம் இருந்ததாக தெரிவித்த அவர் முதல்வர் அளித்த வேண்டுகோளை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டதாகவும் குறிப்பிட்டார். சிறிலங்க ராணுவம் தொடர்ந்து குண்டுகளை வீசி தமிழினத்தை அழித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
அண்டை நாட்டுப் பிரச்னையில் இந்தியா தலையிடுவது அந்நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்கிறார்கள் ஆனால் தமிழக மீனவர்கள் 400-க்கும் மேற்பட்டோர், இதுவரை இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் அப்போது இந்தியாவின் இறையாண்மை எங்கே போனது என்றும் பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.