மன்மோகன் சிங், இந்திய அரசை சிறிலங்கா மதிக்கவில்லை : இல.கணேசன்!
செவ்வாய், 18 நவம்பர் 2008 (17:29 IST)
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுக்கு மரியாதை இல்லை என்றும் இந்திய அரசை சிறிலங்க அரசு மதிக்கவில்லை என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
webdunia photo
FILE
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "இலங்கை தமிழர் பிரச்சனைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், சில கட்சிகளும் சேர்ந்து 25ஆம் தேதி முழு அடைப்பு அறிவித்து இருப்பது தேவையற்றது. இதை பாரதீய ஜனதா ஆதரிக்கவில்லை" என்று கூறினார்.
இலங்கை அரசு விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதாக கூறிய அவர், அங்குள்ள தமிழர்கள் நலனில் அந்நாட்டு அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை என்று குற்றம்சாற்றினார்.
பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இலங்கை அரசு எந்த ஒரு முடிவு எடுத்தாலும் இந்திய அரசிடம் ஆலோசனை கேட்டதாக சுட்டிக்காட்டிய அவர், ஆனால் இப்போது பிரதமர் மன்மோகன் சிங் பேச்சுக்கு மரியாதை இல்லை என்றும் இந்திய அரசையும் இலங்கை மதிக்கவில்லை என்றும் குறை கூறினார்.
இந்திய அரசு உதவிக்காக கொடுத்த ரூ.150 கோடிக்கு பாகிஸ்தானில் இருந்து ஆயுதம் வாங்கி இருப்பதாக தெரிவித்த அவர், அங்குள்ள தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்றால் இந்தியாவுக்கு வர விரும்புபவர்களை பத்திரமாக அழைத்து வந்து அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றார்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்த்து வைப்போம் என்று நம்பிக்கைத் தெரிவித்த அவர், ராமர் பாலம் தேசிய சின்னமாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
சட்டக்கல்லூரியில் நடந்த மோதல் வேதனைக்குரியது. அதுவும் காவல்துறை அந்த சம்பவத்தை கைகட்டி வேடிக்கை பார்த்தது காவல்துறை மீது பொதுமக்களுக்கு இருந்த மரியாதையை குறைத்து விட்டதாக கூறிய அவர், இந்த சம்பவம் குறித்து நல்ல குழு வைத்து முழுமையாக ஆய்வு செய்து தீர்வு காணவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ராஜபாளையத்தில் வரும் 28ஆம் தேதி அனைத்து மாவட்ட பா.ஜ.க. தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது என்றும் இல.கணேசன் தெரிவித்தார்.