சென்னை அரசு பொது மருத்துவமனை முன்பாக திடீரென தீக்குளிக்க முயன்ற சட்டக் கல்லூரி மாணவர் ஒருவரை காவல் துறையினர் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது!
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் கடந்த 12 ஆம் தேதி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாதுரை ஆகிய மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காயமடைந்தவர்களை பார்க்க வந்த சட்டக் கல்லூரி 3ம் ஆண்டு பயின்றுவரும் மாணவர் ஜேம்ஸ் என்பவர், திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து அவருடைய நண்பர்களும், காவல் துறையினர் அவரை தடுத்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், சட்டக் கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், மோதல் தொடர்பான மாணவர்களை கைது செய்யக் கோரியும் ஜேம்ஸ் என்ற மாணவர் திடீரென தீக்குளிக்க முயன்றதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, மாணவர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அய்யாதுரை என்ற மாணவரின் செல்பேசிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும் மாணவர் ஒருவர் தெரிவித்தார்.