புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து 21இல் ஆர்ப்பாட்டம்!
சனி, 15 நவம்பர் 2008 (16:49 IST)
புதிய ஓய்வூதியத் திட்ட மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் கு. பாலசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2004ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மசோதா நாடாளுமன்றப் பரிசீலனையில் உள்ளது.
இந்த திட்டத்தால் நடுத்தரப் பணியாளர்களின் சேமிப்பு வாய்ப்பு மறுக்கப்படும். மேலும், இந்நிதியின் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதால் ஓய்வூதியமே கேள்விக் குறியாகிவிடும்.
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
உழைக்கும் மக்களுக்கு விரோதமான இந்த மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி நவம்பர் 21ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மாநில அரசு ஊழியர்கள் சங்கங்களின் அகில இந்திய பேரமைப்பு முடிவு செய்துள்ளது.
அதன்படி எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.