சிறுசேமிப்பை ஊக்குவிக்க மீண்டும் பரிசு திட்டம் : ரகுமான்கான் தகவல்!

சனி, 15 நவம்பர் 2008 (13:10 IST)
சிறுசேமிப்பை ஊக்குவிக்க மீண்டும் பரிசு திட்டம் கொண்டுவர முதல்வ‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம் பரிந்துரைக்கப்படும் என்று தேசிய சிறுசேமிப்பு ஆலோசனை குழு மாநில துணை தலைவர் ரகுமான்கான் கூறினார்.

தேசிய சிறுசேமிப்பு ஆலோசனை குழு கூட்டம் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் மகேசன்காசிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவினாஷ்குமார் முன்னிலை வகித்தார்.
தேசிய சிறுசேமிப்பு ஆலோசனை குழு மாநில துணை தலைவர் ரகுமான்கான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகை‌யி‌ல், சிறுசேமிப்பு துறை சார்பாக கிசான் விகாஸ் திட்டம், வருமானவரி சலுகை, வைப்புக்கான முதலீடு, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் உள்ளிட்ட 7 திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகிறது. திட்டங்களுக்கு சராசரியாக 8 ‌விழு‌க்காடு வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் அனைத்து அஞ்சலக அலுவலகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் சிறுசேமிப்பு துறை சார்பில் 75,000 முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 35,000 பேர் பெண்கள். சிறுசேமிப்பு துறையில் 2008- 09ஆ‌ம் ஆண்டுக்காக ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.333 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.112 கோடி சேமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.65 கோடி அஞ்சலக தொடர் வைப்புதிட்டத்தின் கீழ் வந்தது.

பல ஆண்களுக்கு முன் சிறுசேமிப்பை ஊக்குவிக்க முதல் பரிசு கார் மற்றும் பல்வேறு பரிசுகள் கொடுக்கப்பட்டது. தற்போது இந்த பரிசு திட்டங்கள் இல்லை. மீண்டும் பரிசு திட்டங்களை கொண்டுவர தமிழக முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும் என்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்