ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!
சனி, 15 நவம்பர் 2008 (10:39 IST)
மின்தடை காரணமாக ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்ய முடியாததால், மீன்களை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 25 டன் இறால், 10 டன் கணவாய், 10 டன் நண்டுகள், 250 டன் பலவகையான மீன்கள், பிடிபடுகின்றன. இங்கு பிடிபடும் இறால் மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி அன்னிய செலாவணி அரசுக்கு கிடைக்கிறது.
மீன்கள் ஏற்றுமதி மற்றும் விற்பனை ஐஸ் கட்டிகளை நம்பியே உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 ஐஸ் கம்பெனிகள் உள்ளன. இதில் பெரிய ஐஸ் பிளான்டிற்கு நாளன்றுக்கு 1,200 யூனிட், சிறிய பிளான்டிற்கு 1,000 யூனிட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது.
தற்போது பெரிய ஐஸ் பிளான்ட்கள் ஒரு மாதத்திற்கு 6,000 யூனிட்களும், சிறிய ஐஸ் பிளான்டுகள் மாதத்திற்கு 2,000 யூனிட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மின்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆனால், ஐஸ் கட்டிகளை உருவாக்க தொடர்ச்சியாக மின்சாரம் தேவைப்படுகிறது. அடிக்கடி தடையேற்படும் மின்சாரத்தால் கூடுதல் செலவாகிறது. இதனால் 50 கிலோ எடையுள்ள ஐஸ்கட்டியை ரூ.50க்கு மீனவர்கள் வாங்கிய நிலைமை மாறி, இப்போது 20 கிலோ எடையுள்ள ஐஸ் கட்டி ரூ.50க்கு வாங்க வேண்டியுள்ளது.
அதனால் ஐஸ் பிளான்டுகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. இளங்கோ தலைமையில் மீன்துறை அதிகாரிகள், மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து, ராமேஸ்வரத்தில் நேற்று நடந்த மீனவ சங்க கூட்டத்தில் ஐஸ் பிளான்ட்களுக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் 1000-க்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.