தொலைபேசி ஒட்டுகேட்பு பிரச்சனை : பேரவையில் அறிக்கை தாக்கல்!
வெள்ளி, 14 நவம்பர் 2008 (15:48 IST)
தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சண்முகம் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும், விழிப்புப் பணி மற்றும் ஊழல் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குனர் உபாத்தியாயாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரகசியமான அலுவலக தகவலை முறையாக சரிபார்க்காமல் தவறாக செய்தி வெளியிட்ட மற்றும் ஒளிபரப்பிய பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்கள் மீதும் குற்றவழக்கு தொடரலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
விழிப்புப் பணி மற்றும் ஊழல் தடுப்புத் துறையின் முன்னாள் இயக்குனர் உபாத்தியாயா, சார்பு ஆய்வாளர் பிரபாகரன், சட்ட ஆலோசகர் விஜயன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.