சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதலைத் தொடர்ந்து, மதுரையில் நேற்றிரவு அரசு பேருந்து மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும் 10 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
வில்லாபுரம் , கரிமேடு, தெப்பக்குளம், பகுதிகளில் பேருந்துகள் மீது சிலர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து 8 பேருந்துகள் சேதமடைந்தன.
இதனால் மதுரை மற்றும் சுற்றுப் புறங்களில் இரவு நேர பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்காக அந்த பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கபட்டனர்.
இந்நிலையில், மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டு இருந்த அரசு பேருந்து ஒன்றுக்கு மர்ம கும்பலைச் சேர்ந்த சிலர் இரவு 11.30 மணியளவில் தீ வைத்து விட்டு ஓடி விட்டனர்.
இதில் பேருந்து மளமளவென எரிய தொடங்கியதும், உள்ளே படுத்து இருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் பதறியபடி அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பினார்கள்.
இதையறிந்த தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைப்பதற்குள் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.