சென்னை சட்டக்கல்லூரி மோதல் : தலைவர்கள் கண்டனம்!
வியாழன், 13 நவம்பர் 2008 (16:30 IST)
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் மாணவர்களிடையே நடந்த மோதலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ : சட்டக்கல்லூரி மாணவர் மோதல் பயங்கர ரத்தக் களறியாகியுள்ளது. காவல்துறையினர் வேடிக்கை பார்த்து உள்ளனர். நாம் இருப்பது நாடா அல்லது காடா என்ற கேள்விதான் எழுகிறது.
ஆயுதங்களோடு மாணவர்களும் வெளியாட்களும் கல்லூரி முழுவதும் சுற்றி வந்த போதிலும் காவல்துறையினரும், உளவு துறையும் தடுக்கவில்லை. மாணவர்கள் அமைதிகாக்க வேண்டும். கடமை தவறிய காவல் துறை அதிகாரிகளை பணியில் இருந்த நீக்க வேண்டும். பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்த வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் : சட்டக்கல்லூரி மாணவர்கள் இடையே நடந்துள்ள மோதல் நெஞ்சை பதற வைக்கும் கொடூரமாக உள்ளது. இந்த கொலை வெறி போக்கை மிக வன்மையாக கண்டிக்கிறேன். மாணவர்களுக்கு இடையே இத்தகைய கொலைத்தனமான வன்முறை போக்கு வளர்ந்து இருப்பது கடும் அதிருப்தியையும் வேதனையையும் அளிக்கிறது.
இந்த கொடூரமான கொலை வெறி தாக்குதலை நடத்திய கும்பலை விட இந்த பயங்கரத்தை கல்லூரி நிர்வாகமும், காவல் துறையும் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது மிகவும் கொடியதாகும். உளவுத்துறையினருக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும், நன்றாக தெரிந்தே இந்த கொடுமை நடந்துள்ளது.
இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த தமிழக அரசு முன் வரவேண்டும். செயல் இழந்து நின்ற காவல்துறை அதிகாரிகள், கல்லூரி நிர்வாகிகள் அனைவரையும் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் : சட்டக்கல்லூரியில் கொலைவெறியோடு நடந்த வன்முறையை பார்த்து அதிர்ச்சியானேன். ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மோதிக் கொண்டது கவலை தரக்கூடியது.
சட்டக்கல்லூரி நிர்வாகமும், காவல் துறையும் என்ன செய்தனர் என்று தெரியவில்லை. கல்லூரி முதல்வர் முன்கூட்டியே காவல் துறைக்கு புகார் கொடுத்திருக்க வேண்டாமா? மோதலை காவல்துறையினர் கை கட்டி வேடிக்கை பார்த்தது வெட்ககேடு.
தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் : சட்டம்- ஒழுங்கை காக்க வேண்டிய காவல் துறையின் கண் எதிரிலேயே நடைபெற்ற சம்பவத்தை வெறும் மவுன சாட்சியாக பார்த்து நின்று கொண்டிருந்த காவல் துறையின் போக்கு காவல் துறை மீது நம்பிக்கை இழக்கச் செய்யும். காவல்துறையினர் சிந்தனை குறித்து அவர்களுக்கு விசேஷ பயிற்சி அளிக்க வேண்டியதும் அவசியம்.
குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், காவல் துறை உள்பட சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும், பாரதீய ஜனதாக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் உள்பட பல்வேறு தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.