சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் : விசாரணை ஆணையம் அமைப்பு!
வியாழன், 13 நவம்பர் 2008 (15:25 IST)
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பான பிரச்சனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் கருணாநிதி பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தினர். பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த மோதலைக் கண்டித்து ஆவேசமாக பேசினர்.
உறுப்பினர்களின் விவாதத்திற்கு பதிலளித்து சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து, ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஜாதிய அடிப்படையில் இதுபோன்ற மோதல்கள் நடைபெறுவதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதனை அரசு எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
மாணவரிகளிடையே நடந்த மோதலை தடுக்க தவறிய கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களிடையே நடந்த மோதலின் போது உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல் துறை உதவி ஆணையர் நாராயணமூர்த்தி, ஆய்வாளர் சேகர்பாபு ஆகியோர் பணியிடை நீக்கமும், 4 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 4 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், தாக்குதலில் ஈடுபட்டதாக 7 மாணவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
வன்முறை தொடராத வண்ணம் தடுக்க சென்னை சட்டக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், கல்லூரி விடுதி மூடப்பட்டுள்ளது என்றும் தற்போது நடைபெற்று வரும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள மற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.