சட்டக் கல்லூரி பிரச்சனை: அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றம்!
வியாழன், 13 நவம்பர் 2008 (14:03 IST)
சென்னை சட்டக் கல்லூரிக்குள் மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக நடந்த விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்ட அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசிய அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் ஜெயக்குமார், சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் காவல் துறையினரில் கண் முன்னாலேயே மாணவர்களுக்கு இடையே நடந்த பயங்கர மோதல் நடந்தது என்றும், காவல் துறையின் செயலின்மைக்குப் பொறுப்பேற்று, உள்துறை அமைச்சக பொறுப்பை வைத்துள்ள முதலமைச்சர் கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று கூறினார்.
பசும்பொன்னில் தங்கள் தலைவர் ஜெயலலிதா மீது தாக்குதல் நடந்தது என்றும், மதுரையில் தினகரன் அலுவலகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டிய ஜெயக்குமார், இவையணைத்தும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதையே காட்டுகிறது என்று கூறினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய பொதுப் பணித் துறை அமைச்சர் துரைமுருகன், 2002ஆம் ஆண்டு பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் தனக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தைத் தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்த மூன்று பேர் பேருந்தை தீ வைத்துக் கொளுத்தியதில் 3 மாணவிகள் உயிரிழந்தனரே, அந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை விட்டு விலகினாரா என்று கேள்வி எழுப்பினார்.
துரைமுருகன் கூறிய கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறத்தினர். அவர்களை எதி்ர்த்து தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
சிறிது நேரத்தில், அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் அவையின் மையப் பகுதிக்கு வந்து அரசிற்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களை இருக்கைக்கு சென்று அமருமாறு அவைத் தலைவர் வலியுறுத்தினார். ஆனால் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டபடியே இருந்ததால், அவர்கள் அனைவரையும் அவையில் இருந்து வெளியேற்றும்படி அவைத் தலைவர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதனைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.