ஆதிதிராவிட விவசாயிகளின் கடன் ரத்து : கருணாநிதி உத்தரவு!
வியாழன், 13 நவம்பர் 2008 (16:41 IST)
ஆதி திராவிட விவசாயிகள் தாட்கோ நிறுவனத்தின் மூலம் பெற்ற கடன் தொகை முழுவதையும் ரத்து செய்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2008- 2009ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் "கூட்டுறவு வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்பட்டதை போன்றே ஆதிதிராவிட விவசாயிகள் 'தாட்கோ' நிறுவனத்திடமிருந்து பெற்று நிலுவையில் உள்ள விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்'' என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பினையொட்டி ஆதிதிராவிடர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்துள்ள பணிகளுக்காகவும், விவசாய நிலத்தை உழுவதற்கான இயந்திரம், விவசாய பண்ணை, ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, துளையிடும் இயந்திரம் போன்ற விவசாயத் திட்டங்களுக்காகவும் ஆதி திராவிட விவசாயிகள் 'தாட்கோ' நிறுவனத்தின் மூலம் 31.3.2006 வரை பெற்ற கடன் தொகை 3 கோடியே 47 லட்சம் ரூபாய், கடன் தொகை மீதான வட்டி 59 லட்சம் ரூபாய், அபராத வட்டி 1 கோடியே 19 லட்சம் ரூபாய் ஆக மொத்தம் 5 கோடியே 25 லட்சம் ரூபாய் முழுவதையும் ஆதிதிராவிட விவசாயிகளின் நலன் கருதி ரத்து செய்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.