இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்களுடன் கப்பல் புறப்பட்டது!
வியாழன், 13 நவம்பர் 2008 (11:16 IST)
இலங்கை தமிழர்களுக்காக திரட்டப்பட்ட நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பல் சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு இன்று காலை புறப்பட்டது.
இந்த நிவாரணப் பொருட்கள் அங்கு செஞ்சிலுவை சங்க சர்வதேச குழுவிடம் 15ஆம் தேதி நேரடியாக ஒப்படைக்கப்படுகிறது.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடந்து வரும் போரில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு உணவு கிடைக்காமல் பசியால் வாடுகின்றனர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு மூலம் திரட்டப்பட்ட நிவாரண பொருட்களான சேலை, வேட்டி, லுங்கி, நைட்டி, சோப்புகள் உள்பட பொருட்களும், அரிசி, பருப்பு, சர்க்கரை, தேயிலை,ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
வரும் 15ஆம் தேதி கொழும்பு சென்றடையும் இந்த கப்பலில் இருந்து இறக்கப்படும், நிவாரண பொருட்கள் அடங்கிய 100 கண்டெய்னர்களும் அங்கேயே திறக்கப்படுகிறது.
அங்கிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, செஞ்சிலுவை சங்க சர்வதேச குழுவிடம் நேரடியாக ஒப்படைக்கப்படுகிறது. நிவாரண பொருட்களை பெற்றுக்கொள்ளும் செஞ்சிலுவை சங்க சர்வதேச குழுவினர் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாக அதை வழங்க இருக்கிறார்கள்.