தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் :பிரதமரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை!
புதன், 12 நவம்பர் 2008 (09:58 IST)
மின்பற்றாக்குறையைப் போக்க தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு நேரில் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து,அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதல்வர் கருணாநிதியின் ஆணைப்படி பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை நிலவரம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மத்திய தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய 2,825 மெகாவாட்டுக்குப் பதிலாக 1,732 மெகாவாட் மட்டுமே அதாவது 61 விழுக்காடு மட்டுமே இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழக அணைகளில் தற்போதுள்ள தண்ணீர் இருப்பு 1,570 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யவே போதுமானது என்றும், கடந்த ஆண்டில் இது 2,209 மில்லியன் யூனிட் அளவுக்கு இருந்தது என்றும் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்யும் வரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியுள்ளது என்றும் டி.ஆர்.பாலு எடுத்துரைத்தார்.
இதுதவிர, 3,800 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகள் மூலம் 1,800 மெகாவாட் மட்டுமே உற்பத்தியாகி தற்போது வெறும் 7 மெகாவாட் மட்டுமே கிடைப்பதையும் பிரதமரிடம் விளக்கினார்.
தமிழகத்தின் அவசர தேவைக்கு கூடுதல் மின்சாரம் வழங்க பிரதமர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அமைச்சர் டி.ஆர்.பாலுவின் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து, தொடர்புடைய துறைகளுக்கு தேவையான உத்தரவு பிறப்பிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்தார்" என்று கூறப்பட்டுள்ளது.