இடைநிலை ஆசிரியர் நியமனம் : தமிழக அரசு விளக்கம்!
செவ்வாய், 11 நவம்பர் 2008 (16:54 IST)
உச்ச நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 1995ஆம் ஆண்டில் இடைநிலை ஆசிரியர்கள் மாநில அளவிலான போட்டித் தேர்வின் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பணியமர்த்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து 1996ஆம் ஆண்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை மாற்றி மாவட்ட அளவிலான வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு அடிப்படையில் அவர்களை தேர்ந்தெடுத்திட அரசு ஆணையிட்டது.
கடந்த ஆண்டுவரை மாவட்ட அளவிலான வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு அடிப்படையிலேயே இடைநிலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், வேலை கிடைப்பதில் தாமதமேற்படுவதாகக் கருதிய சில மாவட்டங்களைச் சேர்ந்த வேலையில்லாத இடைநிலை ஆசிரியர்கள் சிலர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
அவ்வழக்கில் மாவட்ட வேலைவாய்ப்புப் பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது செல்லும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாவட்ட அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் கடந்த ஆண்டு நிரப்பப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்ற பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர். அவ்வழக்கில் மாநில பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அம்மேல்முறையீட்டின் மீது நடந்த விவாதத்தில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி அடிப்படை உரிமை பாதிக்காதவண்ணம் மாநில அளவிலேயே ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இறுதித் தீர்ப்பு இன்னும் பெறப்படவில்லை. எனவே, தற்போது பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் கல்வி நலன் பாதிக்காமல் உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
இவர்களின் நியமனம் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டதாகும்" என்று கூறப்பட்டுள்ளது.