நியாய விலை கடை மூலம் தினமும் 3 லட்சம் மளிகை பொட்டலம் விற்பனை செய்யப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் டி.சுதர்சனம், " மானிய விலை மளிகைப்பொருட்களில் சோம்பு, பட்டை லவங்கத்தை ஏழைகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அவற்றுக்கு பதிலாக வேறு பொருட்கள் வழங்கப்படுமா?' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த உணவு அமைச்சர் வேலு, பட்டை, லவங்கம் பொருட்கள் தேவையானதுதான் என்றாலும் அதற்கு பதிலாக வேறு பொருட்கள் வழங்குவது பற்றி முதல்வரிடம் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றார்.
இதையடுத்து செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார் அவர், "மலிவு விலை மளிகைப்பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கிறதா?' என்று கேட்டார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர், தினமும் 3 லட்சம் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பாக்கெட் வழங்கப்படும் என்றும் மாதத்தில் எந்த நாளிலும் அதை வாங்கி கொள்ளலாம் என்றும் கூறினார்.
தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் எழுந்து, "கடந்த ஆட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட 42 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படாத நிலை இருந்தது. இப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?' என்று கேட்டார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் வேலு, சமையல் எரிவாயு இணைப்பு இல்லாமல் குடும்ப அட்டை வைத்து இருக்கும் அனைவருக்கும் தற்போது மாதம் 3 லிட்டர் மண்எண்ணை வழங்கப்படுவதாகவும் இதில் ஏதாவது குறைபாடு இருந்தால் அந்தந்த பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளுக்கு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
காய்கறி விலை உயர்ந்து விட்டதால் நியாயாவிலை கடைகளில் நியாயவிலையில் காய்கறி விற்கப்படுமா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் வேலு, காய்கறி உற்பத்தி குறைவாக இருந்தால் விலை அதிகமாக இருக்கும் என்றும் உற்பத்தி அதிகமாக இருந்தால் விலை தானாகவே குறைந்து விடும் என்றும் உழவர் சந்தையில் நியாயமான விலையில் காய்கறிகள் விற் கப்படுவதாகவும் அதை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் வேலு கூறினார்.