மத்திய அரசு கண்காணிப்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கல் - தங்கபாலு
இலங்கை தமிழர்களுக்கு திரட்டப்படும் நிவாரண உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. அமைப்புகள் மூலமாக வழங்கப்படும். இந்திய தூதரகம் முலம் மத்திய அரசு நிவாரண பொருட்கள் வழங்குவதை கண்காணிக்கும் என்று தமிழக காங்கிஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர்வரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சுதர்சனம் ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்
அப்போது தமிழக காங்கிரஸ் கழகத்தின் சார்பில் இலங்கை தமிழர் நிவாரண நிதியாக ரூ. 5 லட்சம் வழங்கினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, காங்கிரசை பொறுத்த வரை இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் பேச்சு வார்த்தை நடத்துவதுதான் நிரந்தர தீர்வாகும். ராஜீவ்காந்தி, ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தான் இதற்கு நிரந்தர தீர்வு. பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார்.
வருகிற 13-ந்தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார். அப்போது அவரிடம் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப் படையில் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி காண வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். பிரதமரும் வலியுறுத்துவதாக உறுதி அளித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் மூலம் இலங்கை தமிழர்களுக்கு திரட்டப்படும் நிவாரண உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐ.நா. அமைப்புகள் மூலமாக வழங்கப்படும். இந்திய தூதரகம் முலம் மத்திய அரசு நிவாரண பொருட்கள் வழங்குவதை கண்காணிக்கும் என்றும் தங்கபாலு கூறினார்.