நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவில்லை - ராமதாஸ்

திருச்சி: தமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரில், எதிர்க்கட்சியான அஇஅதிமுக, திமுக அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு ஆதரவளிக்கமாட்டோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு அஇஅதிமுகவிற்கு எந்த முகா‌ந்‌திரமு‌ம் இல்லை என்று குறிப்பிட்டார்.

மேலும், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பாமக என்ன செய்யும் என்று கேட்டதற்கு, அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பாமக நடுநிலைமை வகிக்கும் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் திமுகவை, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் தூக்கி எறிந்துவிட முடியும் என்பதெல்லாம் முடியாத காரியம்.

ஒருவேளை திமுக தலைமையை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் நீக்கிவிட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வர முயன்றால் அப்போது எங்களது ஆதரவு காங்கிரசுக்குத்தான் இருக்கும் என்று ராமதா‌ஸ் கூறினார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒன்றாக வருவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அந்த முடிவு காங்கிரஸ் கையில்தான் உள்ளது. கட்சித் தலைமைதான் அதனை முடிவு செய்யும் என்றா‌ர்.

காங்கிரஸின் கூட்டணி இல்லாமல் மூன்றாவது கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தமிழகத்தில் இல்லை என்று மற்றுமொரு கேள்விக்கு பதிலளிக்கையில் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்