இந்திய கப்பல் கழகத்துக்கு 32 புதிய கப்பல்கள்!

இந்திய கப்பல் கழகத்துக்கு 8 ஆயிரம் கோடி ரூபாயில் 32 புதிய கப்பல்கள் வாங்கப்படும் என்று மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், தேசிய கடல்சார் அபிவிருத்தித் திட்டத்தில் தூத்துக்குடி துறைமுகத்துக்கு 4 ஆயிரத்து 571 கோடி ரூபாயில் 24 திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், முதல் கட்டமாக 961 கோடி ரூபாயில் 17 திட்டங்களும், 2ஆவது கட்டமாக 3 ஆயிரத்து 610 கோடி ரூபாயில் மீதமுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் உள்ள மூன்று துறைமுகங்களுக்கு மட்டும் 13 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தவிர 33 ஆயிரம் கோடி ரூபாயில் மாநிலத்தில் சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

இந்திய கப்பல் கழகத்துக்கு கடந்த 2005-ம் ஆண்டில் ரூ. 591 கோடியில் 2 கப்பல்கள் வாங்கப்பட்டன. பின்பு 2008-ல் முதலில் 1 கப்பலும், தற்போது 4500 சரக்குப் பெட்டக திறன் கொண்ட 2 சரக்கு பெட்டக கப்பல்களும் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், புதிதாக ரூ. 8000 கோடியில் 32 கப்பல்கள் வாங்கப்படவுள்ளன என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்