வைகோ, கண்ணப்பன் விடுதலை : நீதிமன்றம் உத்தரவு!
வியாழன், 6 நவம்பர் 2008 (16:03 IST)
இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவையும், அக்கட்சியின் அவைத் தலைவர் மு.கண்ணப்பனையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ம.தி.மு.க சார்பில் "ஈழத்தில் நடப்பது என்ன?'' என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வைகோ, இலங்கைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடவும் தயங்கமாட்டோம் என்றார்.
இதே கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கண்ணப்பன், தனித் தமிழ்நாடு விரைவில் உருவாகும் என்றார்.
இதைத் தொடர்ந்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசியதாக இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அதன் அடிப்படையில் வைகோவும், கண்ணப்பனும் கடந்த மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் இருவரையும் 15 நாட்கள் சிறைக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்களுடைய 15 நாள் சிறைக்காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் சென்னை ஜார்ஜ்டவுன் 7வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அரசு வழக்கறிஞர், வைகோவிடமும், கண்ணப்பனிடமும் விசாரணை முடிந்து விட்டது என்றும், சாட்சிகளிடமும் விசாரணை முடிந்து விட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இருவரையும் விடுதலை செய்ய நீதிபதி ரவி உத்தரவிட்டார்.