நீதி விசாரணை தேவை: திருமாவளவ‌ன்!

வியாழன், 6 நவம்பர் 2008 (10:26 IST)
மதுரை மா‌வ‌ட்ட‌ம் எழுமலை அருகே நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொ‌ல்.திருமாவளவன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், உத்தபுரம் கிராமத்திலுள்ள தலித் மக்களை கடந்த 2ஆம் தேதி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து விட்டு திரும்பிய போது அவரது வண்டி மீது கல்வீசி தாக்கப்பட்டுள்ளதை ‌நினைவு‌ப்படு‌‌த்‌தியு‌ள்ள அவ‌ர், இதனால், தென்மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்து பதற்ற நிலை உருவாகியுள்ளது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

எழுமலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தலித் மக்கள் மீது துப்பாக்கி நடத்தியதில் இ.கோட்டையைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கொல்லப்பட்டத‌ற்கு கண்டன‌‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ‌திருமாவளவ‌ன், இந்த சம்பவம் காவல்துறையினரின் தலித் விரோதப் போக்கையே வெளிப்படுத்துகிறது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

து‌ப்பா‌க்‌கி சூ‌ட்டி‌ல் தொடர்புடைய காவ‌ல்துறை அதிகாரிகளை உடனே பணி நீக்கம் செய்யவேண்டும் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ள ‌திருமாவளவ‌ன், கிருஷ்ணசாமி மீதான தாக்குதல், துப்பாக்கி சூடு ஆகியவை குறித்து உண்மை நிலையைக் கண்டறிய நீதிவிசாரணை நடத்த வேண்டும் எ‌ன்று‌ம் சுரேஷ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எ‌ன்று‌ம் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்