நிவாரண நிதி வழங்குவது எப்படி? தமிழக அரசு விளக்கம்!
இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதியாக மாநில அரசு ஊழியர்கள் விரும்பினால் தானாக முன்வந்து அளிக்கலாம். யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று மாநில நிதித்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், அரசு ஊழியர்கள் யாருமே இலங்கை தமிழர் நிவாரண நிதி அளிக்க கட்டாயப்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் ஒருநாள் சம்பளமோ அல்லது கூடுதலாகவோ அளிக்க முன்வரலாம். அப்படி அவர்கள் விரும்பினால், யாரிடம் அவர்கள் சம்பளம் வாங்குகிறார்களோ அவரிடம் தங்களது விருப்பக் கடிதத்தை கொடுக்க வேண்டும்.
அதில் தரப்பட வேண்டிய நிதியைக் குறிப்பிட்டு இருக்க வேண்டும். நவம்பர் மாத மொத்த சம்பளத் தொகையில் இருந்து 30-ஆல் வகுக்கப்பட்டு வரும் தொகை, ஒரு நாள் சம்பளமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியிருக்கும் ஞானதேசிகன், இந்த தொகைக்காக தயாரிக்கப்பட்ட காசோலை மற்றும் அறிக்கைகள், அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடம் இருந்து நிதித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் 10-ந் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். நவம்பர் மாதத்தின் மொத்த சம்பளத்தில் இருந்து நிவாரண நிதி கழிக்கப்பட்ட பிறகு மீதமுள்ள தொகையை, ஏற்கனவே உள்ள முறையின்படி எடுத்துக் கொள்ளலாம் எனறும், அரசு ஊழியர்கள், உள்ளாட்சித் துறை, பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.