இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி : 15 நிறுவனங்களுக்கு ஒப்புதல்!
புதன், 5 நவம்பர் 2008 (15:50 IST)
தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியின் 4-வது கட்டமாக 41,62,500 இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை வழங்க 15 நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்திட முதல்வர் கருணாநிதி தலைமையிலான சட்டமன்றக் கட்சிகளின் பிரநிதிகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையிலான சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், டி.சுதர்சனம் (காங்கிரஸ்), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), ஹெச். அப்துல் பாசித் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), மு.ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்), து.ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்குழு கூட்டத்தில் ஒரு வண்ணத் தொலைக்காட்சி பெட்டியின் விலை ரூ.2,321 என்ற அடிப்படையில் பீ.ஜீ. இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து 5 லட்சம் தொலைக் காட்சிப் பெட்டிகளும், க்ளியர் விஷன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடமிருந்து 1 லட்சம் தொலைக்காட்சிப் பெட்டிகளும் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
4ஆம் கட்டத்தில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டத்திற்காக மொத்தம் 41,62,500 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கொள்முதல் செய்வதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.