மின்வெட்டை கண்டித்து கோபியில் நாளை ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!
உற்பத்தியின் உயிர்நாடியான மின்சார வெட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று குற்றம்சாற்றியுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, ஈரோடு வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில் நாளை கோபிசெட்டிப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடும் மின்வெட்டு காரணமாக பவானி, அந்தியூர், பெருந்துறை பகுதியில் உள்ள விசைத்தறிகள் படிப்படியாக மூடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமலும், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும் விசைத்தறி உரிமையாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன என்று தெரிவித்துள்ள ஜெயலலிதா, கோபி செட்டிப்பாளையம், பெருந்துறை, பவானி ஆகிய பகுதிகளில் உள்ள பஞ்சாலை, ஜமுக்காளம் மற்றும் பிற தொழிற்சாலைகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
வேளாண் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பெரும்பாலான தொழில்கள் முடங்கும் நிலையில் இருப்பதாலும், உழைக்கும் வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
உற்பத்தியின் உயிர்நாடியான மின்சார வெட்டு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று கூறியுள்ள ஜெயலலிதா, இதை கண்டித்து ஈரோடு வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில் நாளை (5ஆம் தேதி) காலை 10 மணி அளவில் கோபிசெட்டிப்பாளையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.