ஆ‌ட்‌சியை த‌க்க வை‌க்கவே ‌த‌மிழ‌ர் நல‌னா: கருணா‌நி‌தி‌க்கு விஜயகாந்த் கே‌‌ள்‌வி!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (09:54 IST)
''இலங்கை தமிழர்களை காப்பாற்ற இந்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டிய தமிழக முதலமைச்சர் தனது ஆட்சியையும், அரசியல் கூட்டணியையும் தக்க வைத்துக் கொள்ள தமிழர் நலன்களை கைவிடலாமா என்பதே எனது கேள்வி'' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொடர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''இலங்கை அரசின் வெறித் தாக்குதலுக்கு ஆளான தமிழ் மக்களுக்கு உதவி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினரும் பலவகையான உதவிகளை திரட்டி தமிழக அரசிடம் தந்து வருகின்றனர். இந்த உதவிகள் உண்மையில் மரணப்படுக்கையில் உள்ள இலங்கை‌த் தமிழ் மக்களுக்கு போய்ச் சேருமா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

இலங்கையை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பேசும்போது, ''இங்கு திரட்டப்படும் உதவிகளை ராஜபக்சேவிடம் தருவதைவிட கடலில் கொட்டுவதோ அல்லது தீ வைத்துக் கொளுத்திவிடுவதோகூட நல்லதாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுனாமியால் பெரும்பாலும் இலங்கை தமிழர்களே பாதிக்கப்பட்டனர். அப்போது நான் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக 6 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொடுத்தேன். உலகம் முழுவதிலும் இருந்து இலங்கை அரசுக்கு உதவிகள் வந்து சேர்ந்தன. இருப்பினும், இலங்கை அரசு அந்த உதவிகளை பெற்றுக்கொண்டு தம்மிடமே வைத்துக்கொண்டது. இலங்கை தமிழ் மக்களுக்கு உரிய நிவாரணம் சென்றடையவில்லை. அதனால் பலர் உயிரிழக்க நேரிட்டது.

இலங்கை அரசின் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்ப்பகுதிகளில் நாம் அளிக்கின்ற உதவி அங்குள்ள இந்திய தூதரகத்தின் மேற்பார்வையில் தமிழ் மக்களுக்கு நேரில் கொடுக்கப்பட வேண்டும். அதேபோன்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் செஞ்சிலுவை சங்கம் மூலமோ அல்லது ஐ.நா.சபையின் மூலமோ நேரடியாக உதவிகளை வழங்க செய்ய வேண்டும்.

அங்கு நடக்கும் போரை காரணம் காட்டி இலங்கை அரசு, ஐ.நா.சபை அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தங்களால் பாதுகாப்பு தர முடியாது என்று வெளியேற்றி விடுகிறது. அத்தகைய நிலைமை ஏற்படாமல் கவனிக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. தமிழ் மக்கள் தருகின்ற உதவி இலங்கை தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிங்கள ராணுவ வெறியர்களுக்கு போய் சேர்ந்துவிடக்கூடாது. பாம்புக்கு பால் வார்த்த கதையாக மாறிவிடக்கூடாது.

இலங்கையில் சுமார் 5 லட்சம் தமிழர்கள் தங்கள் பரம்பரை வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து அகதிகளாக உள்ளனர். மேலும் போர் நடக்கும் பகுதியில் 4 லட்சம் தமிழர்கள் சிக்கி தவித்துக் கொண்டுள்ளனர். எந்த நேரமும் உயிர்பறிபோகும் என்ற நிலைமையில் தாய்மார்களும், குழந்தைகளும், வயதானவர்களும் மரண பயத்தில் உள்ளனர். இந்த நிலைமையில் அவர்களுக்கு இன்றியமையாத தேவை முதலில் போர் நிறுத்தம்தான். பிறகுதான் நிவாரண நடவடிக்கைகள் எல்லாம்.

ஆகவே, தமிழ்நாடு வெறும் உதவிகளை வழங்குவதோடு நிறுத்திக் கொண்டு, இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய வற்புறுத்த தவறினால் ஒரு பெரிய மனிதகுல பேரழிவை சந்திக்க வேண்டிவரும். எரிவதை இழுத்தால் கொதிப்பது நின்றுவிடும். இது தமிழக முதலமைச்சருக்கு தெரியாததல்ல.

ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் இன்னொரு நாடு எல்லா நேரங்களிலும் தலையிடக்கூடாது என்று சொல்ல முடியாது. மனிதாபிமான அடிப்படையிலும், இனப்பேரழிவு நேரிடும்போதும், அகதிகள் பெருமளவில் தங்கள் நாட்டிற்குள் குடிபுகும்பொழுதும் ஒரு நாடு இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது உலகம் ஒப்புக்கொண்ட உண்மையாகும்.

இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள போர் நெருக்கடியால் இந்த மூன்று காரணங்களும் உண்டாயிருக்கின்றன. ஆகவே இந்திய அரசு, இலங்கை அரசை வழிக்கு கொண்டு வர இயலும். அண்மையில்கூட ஜார்ஜியா நாட்டில் தெற்கு ஒசேட்டியா மாநிலத்தில் உள்ள ரஷ்யர்கள் பாதிக்கப்பட்டபோது ரஷ்யா தனது படையை ஜார்ஜியா நாட்டுக்குள் அனுப்பி அவர்களை காப்பாற்றியது.

தமிழ்நாட்டு மக்களின் சார்பில் இலங்கை தமிழர்களை காப்பாற்ற இந்திய அரசுக்கு நெருக்கடி தர வேண்டிய தமிழக முதலமைச்சர் தனது ஆட்சியையும், அரசியல் கூட்டணியையும் தக்க வைத்துக் கொள்ள தமிழர் நலன்களை கைவிடலாமா என்பதே எனது கேள்வி'' எ‌ன்று ‌விஜயகா‌ந்‌‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.