இலங்கை தமிழர் நிவாரணம்: மத்திய அரசு உறுதி!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (02:36 IST)
இலங்கையில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழர்களுக்கு மாநில அரசு சேகரித்து வரும் நிவாரண உதவிப் பொருட்கள் சம்பந்தப்பட்ட தமிழர்களைச் சென்றடைவதற்கான பணிகளை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் மேற்கொள்ளும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா மூலமாக இலங்கையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு அனுப்பும் நிவாரண உதவியை எவ்வாறு வழங்குவது என்பதை இலங்கை அரசே முடிவு செய்யும் எனறு பத்திரிகைகளில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, அதுபற்றி தாம் அறிய விரும்புவதாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் முதல் அமைச்சர் கருணாநிதி விளக்கம் கேட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்து பிரணாப் முகர்ஜி அனுப்பியிருக்கும் கடிதத்தில், கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 26ஆம் தேதி பிரணாப் முகர்ஜி சென்னை வந்திருந்த போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு முரணாக நிவாரண உதவிப் பொருட்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருப்பதாக பிரணாப் முகர்ஜிக்கு கருணாநிதி கோர்ரிக்கை விடுத்தார்.

இதற்கு உடனடியாக பிரணாப் முகர்ஜி அனுப்பிய பதிலில், கொழும்பு இந்திய தூதரகத்திற்கு நிவாரணப் பொருட்கள் கப்பலில் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

பின்னர் தூதரகம் மூலமாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்