விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர் ஆர்ப்பாட்டம் : இல.கணேசன் அறிவிப்பு!
திங்கள், 3 நவம்பர் 2008 (12:29 IST)
விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கக்கோரி வரும் 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் இல.கணேசன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய விவசாய விளைபொருள் விலை நிர்ணய ஆலோசனைக்குழு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.1,550 விலை நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. தமிழக அரசு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.1,034 லிருந்து வெறும் ரூ.16-ஐ உயர்த்தி ரூ.1,050 என நிர்ணயம் செய்துள்ளது. சாதாரண விறகு டன் ரூ.2,500-க்கு விற்கும் நிலையில் கரும்புக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள விலை மிக மிகக் குறைவானது. எனவே கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும்.
தமிழக சர்க்கரை ஆணையம் தற்போது ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி ஒரு சர்க்கரை ஆலை எல்லைக்குட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்படாத கரும்பை வேறு ஆலைக்கோ, சொந்தமாக நாட்டுச் சர்க்கரை செய்யவோ வெட்டுவதற்கு முன், சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலையிடமிருந்து தடையின்மை சான்று பெற்று அதன்பின் தான் வெட்ட வேண்டும். பதிவு செய்யப்படாத கரும்பிற்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை விவசாயிகளுக்கு இழைத்துள்ள பெரும் அநீதி. எனவே இது விலக்கப்பட வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. அந்த விவசாய நிலங்களுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்யப்படும்பொழுது மொத்தம் 13 விழுக்காடு வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இழப்பீடு ரூ.15 லட்சத்திற்கு அதிகமாகும்பொழுது சர்சார்ஜ் 5 விழுக்காடு பிடித்தம் செய்யப்படுகிறது. இழப்பீடு 1 லட்சத்துக்குள் இருக்கும்போது எவ்வித பிடித்தமும் செய்யக்கூடாது என நில ஆர்ஜித சட்டம் 194 கூறுகிறது. ஆகவே விவசாய நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்படும்போது எவ்வித வரிப்பிடித்தமும் செய்யப்படக் கூடாது என அரசை வலியுறுத்துகிறோம்.
இந்த மூன்று பிரச்சினைகளிலும் அரசின் போக்கைக் கண்டித்து பாரதீய ஜனதா கட்சி வருகிற 9ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளை திரட்டி, ஆர்ப்பாட்டம் நடத்தும்" என்று இல.கணேசன் கூறியுள்ளார்.