தமிழகத்தில் நாளை கடையடைப்பு!

வியாழன், 30 அக்டோபர் 2008 (13:45 IST)
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தினரின் தாக்குதலால், பாதிப்புக்குள்ளாகி இருக்கும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் சிங்கள ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி நாளை (அக். 31) தமிழ்நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

இதில் சுமார் 25 லட்சம் வணிகர்கள் பங்கேற்கிறார்கள். மளிகை, மருந்து, காய்-கனி, டீக்கடை, தையல் கலைஞர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட வியாபாரிகளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கடையடைப்பு செய்ய இருப்பதாக வெள்ளையன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்