''
தனது கட்சி எம்.பி.க்களின் பதவி விலகல் கடிதங்களைக் கொடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருக்கும் கருணாநிதி, தற்போது நடைபெறும் இலங்கைப் போரில் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை மறந்துவிட்டார்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் முதல்வர் கருணாநிதி. அவர், தனது கட்சி எம்.பி.க்களின் பதவி விலகல் கடிதங்களைக் கொடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்து விட்டார்.
இதன் மூலம் மத்திய அரசுக்கு வரக்கூடிய மிகப்பெரிய ஆபத்தைத் தவிர்த்துவிட்டார். இதற்குப் பரிகாரமாக தி.மு.க. அரசைத் தாங்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வுக்கு ஆதரவாக நடந்து கொள்வர் என, காங்கிரஸ் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் மகள் கனிமொழி, தனது பதவி விலகல் கடிதத்தை ராஜ்யசபா தலைவரிடம் அளிக்காமல், தனது தந்தையிடம் அளித்து நாடகத்தைத் துவக்கியபோதே, இந்த நாடகத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை நான் அறிவேன்.
தற்போது நடைபெறும் இலங்கைப் போரில் வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை மறந்துவிட்டார் கருணாநிதி. அண்மைக் காலங்களில் கிட்டத்தட்ட 500 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை மறந்து விட்டார்.
இலங்கைத் தமிழர்களின் ரட்சகர் தான் தான் என்பதை பறைசாற்றிக் கொள்ள பள்ளிச்சீருடையில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்களைக் கட்டாயப்படுத்தி, கொட்டும் மழையில் நிற்க வைத்து, மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தியதை மறந்து விட்டார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்து அதற்காக தற்போது சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் திரைப்படத் துறையினரைக் கூட மறந்து விட்டார். மத்திய ஆட்சியில் இருப்பவர்களும் கருணாநிதியின் இந்தக் கபட நாடகத்தின் துணை நடிகர்கள். எனவே, கருணாநிதியை பதவி விலகச் சொல்லி அவருக்கு தமிழக மக்கள் தந்திகள் அனுப்ப வேண்டும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.