''இலங்கையில் சண்டை நிரந்தரமாக நிறுத்தப்பட்டு தமிழீழம் அழிவிலிருந்து காப்பாற்றப்படுவதற்கான தொடர் நடவடிக்கைகளை முதலமைச்சர் கருணாநிதி தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும்'' பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் அரசியல் தீர்வை நிறைவேற்றுகின்ற பொறுப்பை அதிபர் ராஜபக்சே ஏற்றுக்கொள்வார் என்று இந்திய அரசிடம் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. போர்ப்பகுதியில் அவதிப்படும் 2 லட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஐக்கிய நாடுகள்சபை மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் மூலமாக நிவாரண உதவிகள் வழங்கப்படும்.
இதற்காக இந்தியா உடனடியாக 800 டன் உணவுப்பொருட்களை அனுப்பி வைக்கும் என்றெல்லாம் முதலமைச்சர் கருணாநிதியுடன் பேச்சு வார்த்தை நடத்தியதற்கு பின்னர் அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜி தெரிவித்து இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பிலும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் ஆறுதல் தருபவையாக இருக்கின்றது. அந்த வகையில் இவை வரவேற்கத்தக்க அம்சங்கள், ஆனால் இவை மட்டும் போதாது.
இந்திய அரசு நிவாரண உதவிப்பொருட்களை எப்போது அனுப்பி வைக்கப்போகிறது என்று காத்துக்கொண்டிருக்காமல் தமிழகஅரசு உடனடியாக உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்கவேண்டும். மாநில அரசு இவற்றையெல்லாம் சேகரித்து அனுப்ப வேண்டும் என்பதற்கு பதிலாக சொந்த நிதியிலிருந்தே ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும்.
நிவாரண உதவிபொருட்களை இந்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி அனுப்பினால்தான் ஈழத் தமிழர்களை பட்டினிபோட்டு சாகடிக்கும் இலங்கை அரசின் சூழ்ச்சியை முறியடிக்க முடியும்.
தமிழகத்தில் இப்போது இப்பிரச்சனையில் உருவாகி இருக்கும் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழகம் என்ன சொல்கிறது என்று கேட்கவும் அதுபற்றி சிந்திக்கவும் டெல்லி முன் வந்திருக்கிறது.
இதுவரையில் டெல்லி, கொழும்பு இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தையில் இப்போது மீண்டும் சென்னையும் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. 20ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள வரவேற்கத்தக்க இந்த திருப்பத்தை முதலமைச்சர் கருணாநிதி நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இலங்கையில் சண்டை நிரந்தரமாக நிறுத்தப்பட்டு தமிழீழம் அழிவிலிருந்து காப்பாற்றப்படுவதற்கான தொடர் நடவடிக்கைகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். இங்குள்ள அனைத்துக்கட்சிகளும் இதில் அரசுக்கு துணை நிற்க வேண்டும். அரசியல் கருத்து வேறுபாடுகளால் ஒதுங்கி நிற்பவர்களையும் அரவணைத்துக் கொண்டு உரத்தகுரல் கொடுத்தால்தான் இந்திய அரசை அசைக்க முடியும் என்பதை புரிந்து கொண்டிருக்கிறோம்.
எனவே தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்களும் முழு மனநிறையவும் மகிழ்ச்சியும் அடையத்தக்க வகையில் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சுமூகமான அரசியல் தீர்வு காணும் முயற்சியில் இந்தியா சோர்ந்துவிடாமல் தொடர்ந்து ஈடுபடும்படி தமிழக அரசும் தமிழகமும் வலியுறுத்தி வெற்றி காண வேண்டும். அதுவரை நமது கூட்டு முயற்சியை தொடர வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.