வீரப்பன் காட்டில் தீபாவளி கொண்டாட்டம்!

செவ்வாய், 28 அக்டோபர் 2008 (15:24 IST)
சந்தனக் கடத்தல் வீரப்பன் நடமாடிய சத்தியமங்கலம் மலைப்பகுதியில் இருக்கும் கிராமங்களில் இந்தத் தீபாவளியை மக்கள் தித்திக்கும் தீபாவளியாகக் கொண்டாடி வருகின்றனர். அதிரடிப்படையினர் தடையின்றி பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

சந்தனக் கடத்தல் வீரப்பன் தன் கும்பலுடன் சத்தியமங்கலம் மலைப்பகுதியைச் சேர்ந்த ஆசனூர், தாளவாடி மற்றும் கடம்பூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பதுங்கி வாழ்ந்து வந்தான். இதன் காரணமாக மலைக்கிராமத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக வீரப்பன் வாழ்ந்த காலத்தில் தீபாவளியின்போது மலை கிராமங்களில் பட்டாசு வெடிக்க அதிரடிப்படையினர் தடைவிதித்து வந்தனர். இதன் காரணமாக கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. தீபாவளியின் முக்கிய நிகழ்வான பட்டாசு வெடிப்பதற்கு அனுமதிக்கப்படாத காரணத்தால் அப்பகுதி மக்களுக்கு திறன் இல்லாத தீபாவளியாக இருந்து வந்தது.

வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகும் இப்பகுதி மக்கள் பெரியளவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாட முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம் முதலில் இவர்களது வறுமை. அடுத்து வீரப்பன் பிரச்சனையின்போது பல்வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்து சென்ற மக்கள் அனைவரும் தற்போது அவர்களது சொந்த ஊரான கடம்பூர் மற்றும் தாளவாடி, ஆசனூர் பகுதிகளுக்குத் திரும்பி விட்டனர்.

அடுத்து கடந்த ஆண்டு இப்பகுதிகளில் மக்கள் பயிரிட்ட குச்சி கிழங்கு மற்றும் பீன்ஸ், உருளைகிழங்கு உள்ளிட்ட பயிர்கள் செழிப்பாக வளர்ந்து இப்பகுதி மக்களின் பணத்தேவையை பெருமளவு பூர்த்தி செய்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் தற்போது ஓரளவு வசதியான வாழ்க்கைக்கு வந்துள்ளனர்.

இதனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு ஈரோடு, கோய‌ம்பு‌த்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று புத்தாடைகள் வாங்கி மற்றும் வித, விதமான பட்டாசுகள் வாங்கியும் வெடித்து மகிழ்கின்றனர். இதுமட்டுமின்றி வெளியூர்களுக்கு கல்யாணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்கள் பயமின்றி தங்கள் பிறந்த வீட்டிற்கு பண்டிகைக்காக வந்து செல்வதும் குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்