வைகோ, அமீர், சீமானை விடுதலை செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!
சனி, 25 அக்டோபர் 2008 (23:04 IST)
இலங்கைத் தமிழகர்களுக்கு ஆதரவாகப் பேசியதால் பிரிவினையை தூண்டியதாக கைது செய்யப்பட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அவைத்தலைவர் கண்ணப்பன், திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
webdunia photo
FILE
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களுக்காக உணர்ச்சிப்பூர்வமாக குரல் கொடுப்பது, சிறிலங்கா அரசின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்றவை நாட்டின் இறையாண்மையை பாதிக்காது என்பதுடன் அது பிரிவினையையும் தூண்டாது.
எனவே வைகோ, கண்ணப்பன், அமீர், சீமான் ஆகியோரை கைது செய்ததை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும், ராமேஸ்வரத்தில் நடந்த பேரணியில் அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியிருந்தாலும், ஒருபோதும் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என அவர்கள் அளித்துள்ள உறுதிமொழியை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்க வேண்டும்.
இதேபோல் இலங்கையில் என்ன நடக்கிறது என்ற தலைப்பிலான கூட்டத்தில்தான் வைகோவும், கண்ணப்பனும் பேசினர். எனவே அவர்களையும் தமிழக அரசு விடுவிக்க வேண்டும் என அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.