வங்கக் கடலில் புதிதாக மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு தென் கிழக்கே சுமார் 370 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து வடக்கு நோக்கி நகர்ந்து செல்லும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரப் பிரதேசத்தின் கரையோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆந்திராவின் கரையோரப் பகுதிகள், தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் நேற்று பெய்த அடை மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.