திருப்பூ‌ர் மாவட்டம்: அரசாணை வெளியீடு!

சனி, 25 அக்டோபர் 2008 (16:56 IST)
கோவை, ஈரோடு மாவட்டங்களை பிரித்து, திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமை‌ப்பதற்கான அரசாணையை த‌மிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் வருவாய்த் துறை சார்பில் அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய 2 மாவட்டங்கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டம், ஈரோடை தலைமையிடமாக கொண்டு ஈரோடு மாவட்டம் (ஏற்கனவே உள்ளது), மூன்றாவதாக புதிதாக திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு திருப்பூர் மாவட்டம் என பிரிக்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோயம்புத்தூர் வடக்கு, தெற்கு, மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தாலுகாக்களும், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம், பவானி தாலுகாக்களும் அடங்கும்.

புதியதாக உதயமாகும் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவினாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை (இவை இதுவரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்தது), தாராபுரம், காங்கேயம் (இவை ஈரோடு மாவட்டத்தில் இருந்தது) ஆகிய 6 தாலுகாக்களும் அடங்கும் எ‌ன்று அந்த அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்