சீமான், அமீரை விடுதலை செய்யக்கோரி திரைத்துறையினர் ஆர்ப்பாட்டம்! 500 பேர் கைது!

சனி, 25 அக்டோபர் 2008 (15:47 IST)
தேசத் துரோகக் குற்றச்சாற்றின் பேரில் வழக்குத் தொடரப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரை விடுவிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்த திரைப்படத் துறையினர் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஏ.வி.எம். படபிடிப்பு வளாகத்திற்கு வெளியே, ஆற்காடு சாலையில், தமிழ் திரையுலகின் துணை இயக்குனர்கள், துணை கலை இயக்குனர்கள், துணை ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் பெருமளவிற்குத் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்திப் பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும், இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் முழக்கம் எழுப்பினர்.

காவல்துறையினர் அவ்விடத்திற்கு வந்து அவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட துணை இயக்குனர்கள் அனைவரும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள மாநகராட்சி சமூக கூடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் எதற்காக என்று நமது செய்தியாளரிடம் விளக்கிய இயக்குனர் சீமானிடம் உதவி இயக்குனராக பணியாற்றிடும் பாலா, இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்படவேண்டுமெனில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு நிர்பந்தம் செய்யவேண்டும் என்று கூறினார்.

இதை வலியுறுத்தித்தான் சீமானும், அமீரும், மற்ற திரையுலகத்தினரும் பேசினர் என்றும், எனவே தமிழக அரசு அவர்களை உடனே விடுவிக்கவேண்டும் என்றும் கூறினார்.

சிறிலங்க அரசை போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்துவது அந்நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவது ஆகாதா? என்று கேள்வி எழுப்பப்படுவது அடிப்படையற்றது என்று கூறிய பாலா, சிறிலங்க அரசிற்கு ராடாரையும், ஆயுதங்களையும் வழங்கிய மத்திய அரசிற்கு அதன் உள் விவகாரங்களில் தலையிட்டு போரை நிறுத்துமாறு கூற உரிமையுள்ளது என்று கூறினார்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை காங்கிரஸ் கட்சி கண்டித்து வருகிறதே என்று கேட்டதற்கு, தமிழக மீனவர்கள் 400 பேர் சிறிலங்க கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதுபற்றி ஒரு தடவை கூட ஒரு கண்டன அறிக்கை வெளியிடாத தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினருக்கு இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்துப் பேச எந்த அருகதையும் இல்லை என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்