மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், முதல் அமைச்சர் கருணாநிதியின் உருவ பொம்மையை மதிமுகவின்ர் எரித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதுடன் பிரிவினைவாதத்தைத் தூண்டியதாகக் கூறி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யபட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மதிமுக-வினர் மறியலில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மதிமுக நகர செயலாளர் முரளி தலைமையில் சிலர் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்தினர்.
காவல்துறையினர் உடனடியாக அவர்களைத் தடுத்ததுடன், முரளி உட்பட 6 பேரைக் கைது செய்தனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்திற்குள், கருணாநிதி உருவ பொம்மை எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் முன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தாமரைக்கனியின் மகன் தங்கமாங்கனி மற்றும் திமுக-வைச் சேர்ந்த சிலர், வைகோவின் உருவ பொம்மையை எரித்தனர். அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.