15 நாள் காவல்: சீமான், அமீர் சிறையில் அடைப்பு!

சனி, 25 அக்டோபர் 2008 (13:35 IST)
ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக திரைத்துறையினர் நடத்திய பேரணியின் போது, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னையில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட இயக்குனர்கள் சீமான், அமீர் இருவரும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை மதுரைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். விமான நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவர்கள் இருவரும் ராமநாதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இருவரையும், குற்றவியல் நீதிபதி தங்கவேல் முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

அவர்கள் இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே இயக்குனர்கள் அமீர், சீமான் இருவரையும் கைது செய்துள்ள தமிழக அரசைக் கண்டித்து, திரைப்படத் துறையினர் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்