சீமான், அமீர் கைது கருத்துரிமை பறிக்கும் வ‌ன்கொடுமை : திருமாவளவன்!

சனி, 25 அக்டோபர் 2008 (13:03 IST)
திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் கைது செய்யப்பட்டிருப்பது கருத்துரிமை பறிக்கும் வ‌ன்கொடுமை என்று‌ம் அவ‌ர்களை உடனடியாக ‌விடுதலை செ‌ய்ய வே‌‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ‌விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது கு‌றி‌த்து அவ‌ர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை‌யி‌ல், "திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் ஆகியோரும் ம.ி.ு.க. பொதுச் செயலர் வைகோவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது கருத்துரிமைப் பறிக்கும் அரசு வன்கொடுமையென விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது.

தமிழினத்தின் பகைவர்கள் மேலும் துள்ளுவதற்கு இத்தகு கைது நடவடிக்கைகள் இடம்கொடுக்கும் என்பதை தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக் காட்டுகிறது.

தமிழினத்தின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்தைச் சுவைப்பவர்களும், சுவைத்தவர்களும் கொஞ்சமும் அச்சமில்லாமல், நன்றி உணர்வில்லாமல் சிங்கள இனவெறியாளர்களுக்குத் துணைப் போகிறச்சூழலில் அவர்களைத் தோலுரிப்பது தான் இன்றையச் சூழலில் இன்றியமையததாகும்.

மாறாக, இனப்பகைவர்களின் துரோக‌க் குரலுக்குச் செவிமடுப்பதும், தமிழ் உணர்வாளர்களைக் கைது செய்வதும் பொங்கியெழும் தமிழ் தேசிய இன ஒருமையை நீர்த்துப் போகவே செய்யும்.

ஆகவே, கைது செய்யப்பட்டோரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.

சிங்களப் படையினரின் குண்டு வீச்சில் மடிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ்ச் சொந்தங்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், பட்டாசு கொளுத்தாமல், புத்தாடை உடுத்தாமல் தீபாவளியைத் தவிர்த்திட வேண்டுமாறும் தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறோம் எ‌ன்று திருமாவளவன் கூறியுள்ளார்.