ராஜீவ் சிலை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும்: தங்கபாலு!
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (16:22 IST)
ராஜீவ்காந்தி உருவச் சிலையை உடைத்த குற்றவாளிகளை உடனடியாக தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென்றும், இதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கேட்டுக் கொண்டுள்ளார்.
Puthinam Photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக தனது அரசியல் வாழ்நாள் முழுவதும் கடுமையாக, உள்ளார்ந்த உணர்வோடு உழைத்தாரோ அம்மாபெரும் தலைவர் ராஜீவ்காந்தியை அதே தமிழின துரோகிகள் படுகொலை செய்தனர். உலக வரலாற்றில் ஈடு ய்ய முடியாத அச்சோக அத்தியாயத்தை உருவாக்கிய அந்த தமிழின துரோகிகளின் அமைப்பான விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் அந்த தடைச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தமிழின துரோகிகள் நடமாட்டம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தமிழ் மக்களும், நாட்டு நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அரசியல் கட்சித் தலை வர்களும் தொடர்ந்து குரல் கொடுத்தே வருகின்றனர்.
இந்நிலையில் கொடுங்கையூர், சின்னாண்டி மடத்திலிருந்த ராஜீவ் காந்தி உருவச் சிலையை இன்று காலையில் தமிழினத் துரோகிகள் உடைத்து சேதப்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளது. இக்கொடிய சம்பவம் அன்றைக்கு தலைவர் ராஜீவ்காந்தியின் உயிரைப் போக்கிய கொலைகாரக் கூட்டம் இன்னும் தமிழகத்தில் துணிச்சலாக நடமாடிக் கொண்டிருக்கிறது என்பதையே உறுதிப்படுத்துகிறது.
ஏற்கனவே இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகிய தலைவர்களையும், தியாகத்தையும் கொச்சைப்படுத்தி பேசிய தமிழின துரோகிகளின் செயல்பாட்டுக்கு தமிழக மற்றும் காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
இந்நிலையில் ராஜீவ்காந்தி உருவச் சிலையை உடைத்த குற்றவாளிகளை உடனடியாக தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென்றும், மேலும் உரிய தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கேட்டுகொள்கிறேன் என்று தங்கபாலு கூறியுள்ளார்.