கரும்பு விலையை டன்னுக்கு ரூ.2,000 ஆக உயர்த்த ஜெயலலிதா கோரிக்கை!

வெள்ளி, 24 அக்டோபர் 2008 (14:39 IST)
த‌மிழக அரசு, குறைந்தபட்சம் ஒரு டன் கரும்புக்கு 2,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதியை சர்க்கரை ஆலைகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றுமஅ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2008-2009 ஆம் ஆண்டிற்கான ஒரு டன் கரும்பு விலை 1,050 ரூபாய் என தி.மு.க. அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டதற்கு முதலில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதுள்ள விலைவாசி உயர்வையும், மின்சார வெட்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், மேற்படி விலையில் கரும்பு உற்பத்தி செய்வது என்பது இயலாத காரியமாகும்.

கரும்பு விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஒரு டன் கரும்பு விலை குறைந்தபட்சம் 1,014 ரூபாய் என்று 16.9.2005 அன்று எனது ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. அப்போது தங்கு தடையின்றி மின்சாரம் கிடைத்தது, விலைவாசியும் கட்டுக்குள் இருந்தது. அப்போதிருந்த விலை வாசியையும் இப்போதுள்ள விலைவாசியையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அனைத்துப் பொருட்களின் விலைகளும் மும்மடங்கு உயர்ந்துள்ளன.

தமிழ்நாடு முழுவதும் கடுமையான மின்சார வெட்டு தற்போது நிலவுகிறது. இது போன்ற சூழ்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து வெறும் 36 ரூபாய் உயர்வு என்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை.

கரும்பில் இருந்து மொலாஸஸ், எத்தனால் போன்ற உபபொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. எத்தனால் கலந்த பெட்ரோல் மற்றும் டீசலை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள போதிலும், எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. வருமா னம் வரக்கூடிய இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய விவசாய விளை பொருட்கள் உற்பத்திக்கேற்ற விலை நிர்ணய ஆணையம், ஒரு டன் கரும்புக்கான குறைந்தபட்ச விலை 1,550 ரூபாய் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தும், தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு மேற்படி பரிந்துரை மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போதுள்ள விலைவாசி ஏற்றம், மின்சார வெட்டு, வெட்டுக் கூலி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, விவசாய விளைபொருட்கள் உற்பத்திக்கேற்ற விலை நிர்ணய ஆணையம் பரிந்துரைத்த ஒரு டன் கரும்பு விலை 1,550 ரூபாயை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், இத்துடன் மாநில அரசு தன்னுடைய பரிந்துரை விலையாக 450 ரூபாயை அறிவிக்க வேண்டும் என் றும், ஆக மொத்தம், குறைந்தபட்சம் ஒரு டன் கரும்புக்கு 2,000 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதியை சர்க்கரை ஆலைகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கரும்பு விவசாயிகளின் சார்பில் மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.