விவசாய கடன் ரூ.196 கோடி தள்ளுபடி: தமிழக அரசு அறிவிப்பு!
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (13:43 IST)
சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 196.37 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழக அமைச்சரவையின் 32வது கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூன்று விடயங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.
TN.Gov.
TNG
சட்டமன்ற பேரவைக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்ததன் தொடர்ச்சியாக, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த "ஜி.எம்.பி. இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரித்த கட்டட வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு திருத்திய மதிப்பீட்டிற்கு நிர்வாக ஒப்புதல் அளித்திட அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
போலி முத்திரைத்தாள்களின் புழக்கத்தை தவிர்த்திட பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய முத்திரைத் தீர்வையை வசூலிக்க மாற்று வழியாக மின்னணு மூலமாக முத்திரைத் தீர்வை செலுத்தும் முறையை மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட "ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்' நிறுவனம் மூலமாக செயல்படுத்திட அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இந்த முறை முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சார்பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் விரிவுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மண்வள மற்றும் நீர்வள பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து 196 கோடியே 37 லட்சத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகளிடமிருந்து அரசிற்கு வந்த வேண்டு கோளை ஏற்று மேற்படி கடன் தொகையை தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.