சீமான், அமீரை கைது செய்ய வேண்டும்: தங்கபாலு!
வெள்ளி, 24 அக்டோபர் 2008 (09:43 IST)
''தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் பேசிய சீமான், அமீர் போன்றவர்களையும், தேசவிரோத சக்திகளை ஆதரிப்பவர் எவராயினும் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் வழியில் தண்டிக்கப்பட வேண்டும்'' தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.வி.தங்கபாலு வலியுறுத்தியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்து தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை பகிரங்கமாக ஆதரித்தும், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தனித்தமிழ்நாடு வேண்டுமென்று பேசியும் தேசவிரோத குற்றம் இழைத்த ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மற்றும் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென்ற காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளை ஏற்று அதை செயல்படுத்தியதன் மூலம் தமிழக முதலமைச்சர் தன்னுடைய கடமையை நிறைவேற்றி உள்ளார்.
இந்தியாவின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும், நிலைப்படுத்துகிற இந்த செயல்பாட்டினை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முழுமனதோடு வரவேற்கிறது. இந்தியாவின் எந்த ஒரு பகுதியிலும் வன்முறை, தீவிரவாதம், நாட்டு பிரிவினைக்கு இடமில்லை. அதற்கு எதிராக செயல்படுவோர் தேசவிரோத குற்றமிழைப்பவர்கள் ஆவார்கள்.
இதே குற்றங்களை தொடர்ந்து செய்பவர்கள் மற்றும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படுபவர்களின் பட்டியல் தமிழக அரசின் கையில் உள்ளது. அவர்களையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் மாட்சியை நிலைநிறுத்த வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகிய தலைவர்களை படுகொலை செய்த தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் பேசிய சீமான், அமீர் போன்றவர்களையும் மற்றும் தேசவிரோத சக்திகளை ஆதரிப்பவர் எவராயினும் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் வழியில் தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வைகோ மற்றும் கண்ணப்பன் ஆகியோரை கைது செய்த நிகழ்வினை கேட்டறிந்தவுடன் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை டெல்லியில் இருந்து தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துகொண்டேன்'' என்று தங்கபாலு கூறியுள்ளார்.